Friday, March 22, 2024

உணர்வின் தருணம்

 வண்ணக் கொப்பரையில்

தூரிகை விழுந்து

தற்கொலை

செய்துகொள்வதுபோல்

கனவு வந்தபோது

அவன் அலறி துடித்து

எழுந்தான்

அந்த உணர்வின்

தருணம்தான்

அவனை

ஓவியனாக்கியது

Monday, March 18, 2024

பறவையின் பாடல்

பறவைபோன தடத்தில்

மிதந்துகொண்டிருந்தன வார்த்தைகள்

 

எதுவும் பிரிந்துபோகாமல்

காற்று மெல்ல ஊதி ஒன்றாக்கி

என்னிடம்

கொண்டுவந்து சேர்த்தது

 

கவனித்து வரிசையாக்கி

இசைலயத்தோடு எழுதினேன்

 

பிறகு பாடியபோது

அதே பறவை

ஒரு கிளை மீதமர்ந்து

கேட்டுக்கொண்டிருந்தது


Wednesday, February 14, 2024

விடுதலை

 சிறைகளை

மாற்றிக்கொண்டே

இருக்கிறீர்கள்

விடுதலை எனச் சொல்கிறீர்கள்

 

எங்கேயோ...எதையோ...

 

சுவரில் சாய்ந்து

எங்கேயோ பார்த்து

எதையோ முணுமுணுக்கிறாய்

நான் அதற்குச் சொற்களை யோசிக்கிறேன்

நீ கேட்டு முணுமுணுப்பில் பொறுத்திப் பாடுகிறாய்

உயிர் பெறுகிறது பாடல்

வியப்பு மேலிடக் கேட்கிறேன்

இந்தப் பாடல் எங்கிருந்து வந்தது

உன் முணுமுணுப்பிலிருந்தா

இல்லை எனத் தலையாட்டுகிறாய்

என் சொற்களிலிருந்தா

மறுபடியும் மறுக்கிறாய்

பிறகு எங்கிருந்து வந்தது

கண்களைத் துடைத்துக்கொண்டு

சொல்கிறாய்

துயரத்திலிருந்து


 

Wednesday, January 17, 2024

உங்களை எப்போது விடுதலை செய்யப்போகிறீர்கள்

உங்களை எப்போது

விடுதலை செய்யப்போகிறீர்கள்

நினைவுகளில் அடைபட்டிருக்கிறீர்கள்

கனவுகளில் சிறைபட்டிருக்கிறீர்கள்

கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டிருக்கிறீர்கள்

எதிர்பார்ப்புகளில் அகப்பட்டிருக்கிறீர்கள்

தேவைகளில் திணிக்கப்பட்டிருக்கிறீர்கள்

ஆசைகளில் அடைக்கப்பட்டிருக்கிறீர்கள்

சொல்லிக்கொண்டே வந்தவர்

சொல்லிக்கொண்டே போனார்

அவர் சொல்லியது

கேட்டுக்கொண்டே இருந்தது

உங்களை எப்போது

விடுதலை செய்யப்போகிறீர்கள்


Tuesday, January 16, 2024

கதையும் குழந்தையும்

 கடவுளின் தோள்மேல்

அமர்ந்திருக்கிறேன்

எனச்சொன்னது

மலைமேல்

அமர்ந்திருந்த குழந்தை

எப்போது

கீழே வருவாய்

குரல் எதிரொலிக்கக் கேட்டேன்

கடவுள் எனக்குக்

கதைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்

கேட்டு முடித்தவுடன்

வருவேன் என்றது

வந்தபின்

அந்த கதையை எனக்குச் சொல்வாயா

ஆர்வம் கூட கேட்டேன்

கடவுள் எனக்குச் சொன்னக்

கதையைச் சொல்ல மாட்டேன்

நான் மலைக்குச் சொன்னக்

கதையைச் சொல்கிறேன் என்றது

   

 

Tuesday, January 02, 2024

இருள்

1
அழகான இருள்
அழகை
மாற்றிக்கொண்டே இருக்கிறது
2
பாலத்தின் அடியில்
நதிபோல்
ஓடும் இருளில்
நீந்திக் கரையேறலாம்
வா
3
பாய்போல்
சுருட்டிய இருளை
கனவில்
விரித்து வைத்தேன்
நட்சத்திரங்கள் வந்தால்
உரையாடலாம்
4
இருளை வரைந்து
உள்போய் வந்த
குழந்தை சொன்னது
கருப்பு ஆகாயத்தில்
மிதந்து வந்தேன்
5
சத்தம் போட்டு
இருளை எழுப்பிவிட்டேன்
அமைதியாக என்னை
உறங்கச் சொன்னது
6
இருள் என்னைத்
திருத்தும்போதெல்லாம்
வெளிச்சம்
விலகி நின்று
கவனிக்கிறது
7
இமை மூடி
கேட்கிறேன்
இருளின் பாடலை
8
தனிமைப் பசி
கனிந்த இருள்
தியானச் சுவை

Thursday, December 28, 2023

நகரமும் அவர்களும்

நகரத்திற்குப் புதிதாக வந்த இளைஞன் அவன்

இந்த நகரத்துல எங்கையாவது

அன்பு தென்படுமான்னு பாத்தேன்

அது உங்க கண்ல இருக்கு என

எதிர்படும் பெண்ணிடம் சொல்கிறான்

கண்டறிந்த  பெருமிதத்தோடு

 

இதை எதிர்பார்க்காத

நகரத்திற்குப் புதிதாக வந்திருக்கும் பெண்

அவனைப் பார்க்கிறாள்

அவள் பேருந்து வருகிறது

என்ன சொல்றதுன்னு தெரியல

உங்க கண்ல

நம்பிக்கை தெரியுது

சொல்லிவிட்டு

வேகமாக ஓடிப்போய்ப்

பேருந்தில் ஏறுகிறாள்

போ

1

வழியே

வழி காட்டும்

போ

2

நிற்காதே

தேங்கிப்போவாய்

3

கண்களுக்கு

விழிப்பை

ஊட்டு

4

நீ

நடைப்போராளி

5

கால்களின்

பாடல் கேள்

இசைபோல்

நட

6

தடைக்கற்களில்

வேகத்தின் குறிப்புகள்

இருக்கட்டும்

7

மூச்சுக்காற்றுக்கு

நன்றி சொல்

உன்னை

முந்திச் செல்பவனை

முந்திச் செல்

8

நேரம் முக்கியம்

உன்னோடு

உரையாடு

போதும்

9

கேள்வி

அழைத்துப்போகும்

விடை

வேகமாக்கும்

10

களைப்படையா

கர்வம் கொள்

11

நினைவுகளில்

பயணக்குறிப்புகளை

எழுதி வை

12

இமை மூடித்

திறப்பதற்குள்

பாய்ந்து பழகு

13

கால்களைச்

சிறகுகளாக்கு

பாதைகளை

வானமாக்கு

தினசரி செய்திகள்

கையிலிருந்த தினசரியில் செய்திகள் கனத்தன

எண்ணூரில் எண்ணெய்ப் படலம்

என்னென்னவோ சொல்கிறார்கள்

கவலை பாரமாய் அழுத்துகிறது

 

ஏரிகள் காணாமல் போய்விட்டன

கட்டிடங்கள் முளைத்துவிட்டன

 

இவரைக் கேட்டால் அவரைச் சொல்கிறார்

அவரைக் கேட்டால் இவரைச் சொல்கிறார்

 

கூசாமல் குவித்து வைத்திருக்கிறோம்

குப்பைகளையும் பொய்களையும்

 

வெட்கமின்றி உலா வருகின்றன

ஊழல் முகங்கள்

 

தீர்வைத் தர வேண்டும்

உணவுப்பொட்டலங்களோடு முடிந்து விடுகிறது

புகைப்பட வெளிச்சத்தில் பெருமிதங்கள்

 

எல்லாவற்றிற்கும்

பதில் வைத்திருக்கிறார்கள்

கேள்வி கேட்பவர்களின்

வாயை மூடி விடுகிறார்கள்

 

இன்னொரு தேநீர்

பெரியவரிடம் கேட்டேன்

தலையாட்டினார்

 

மனுஷன் நேர்மையா இருந்தா

நாடு தூய்மையா இருக்கும்  என்றார்

சட்டையில் சிந்திய தேநீரைத்

துடைத்துக்கொண்டார்

 

அமைதியானவர் திடீரென

வெடிப்பது போல்

சொல்லிவிட்டுப் போனார்

 

நாக்க புடுங்கிகிட்டு சாகற மாதிரி

நாலு வரி எழுதுங்க தம்பி

 

எதுவும் தோன்றவில்லை

தினசரியில் தொலைந்து போனவரோடு

நானும் தொலைந்து கொண்டிருந்தேன்